top of page
lakshmivallab_edited.jpg

ஸ்ரீமதே லக்ஷ்மீநாராயணாப்யாம் நம:
ஸ்ரீமத் விகநஸ மஹாகுரவே நம:


 திருமகள் மணாளனான எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தன் திவ்ய ஸங்கல்பத்தாலேயே அகில லோகங்களையும் ஆக்கியும், காத்தும், தன்னிடம் லயிக்கச் செய்தும் அருள்கிறார் என வேதங்கள் கூறுகின்றன. பரமபதநாதனான பகவான் மனிதர்கள் அனைத்து வளங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ அர்ச்சா ரூபியாய் திவ்யமங்கள சிலா உருவத்தோடு திருக்கோவில்களிலும் இல்லங்களிலும் எழுந்தருளுகிறார். பக்தர்கள் இவ்வுலகிலும் ஸ்வர்கத்திலும் வாழ்ந்து பின் பிறவியின் முடிவில் வைகுண்டம் அடைய ஆலய வழிபாடு மிகத் தேவையான ஒன்று. கோவிலில் பெருமாளை பூஜிக்கும் முறைகளை பகவானே வகுத்தார். அந்த ஆகம சாஸ்திரங்களுள் ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்திரம்  மிக உயர்வானது. 


 ஸ்ரீவைகானஸ பகவத் ஶாஸ்த்ரம் என்ற வைஷ்ணவ ஆகமம் பகவானின் இதயத்திலிருந்து தோன்றிய ஸ்ரீவிகனஸ மகரிஷி என்பவர் மூலம் பகவானே நேரடியாக  அருளிய அருமையான ஶாஸ்த்ரம். இதனால் வைகானஸ ஆகமத்தை ஸ்ரீஶாஸ்த்ரம் என்றும் அழைப்பர். எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் பிரம்மாவை படைத்த பின்னர், நான் பூலோகத்தில் ஆலயங்களில் அவதரித்து மக்களுக்கு அருள் புரிவேன், என்னை ஆகம வழிமுறைகளை உருவாக்கி ஆராதியுங்கள் என்றார். ஆனால், பிரம்மா தயங்கினார், அதனால் பகவான் தன் மனத்திலேயே  விஶேஷமான யோக த்யானத்தில் ஆழ்ந்து நன்கு சிறந்த எண்ணங்களால் கனனம்(ஆழத் தோண்டுதல்) செய்து,  வேதமயமான ஸ்ரீவிகனஸ மஹரிஷி என்ற தேவரிஷியை தோற்றுவித்தார். ஸ்ரீவிகநஸ மாமுனிவருக்கும் ப்ரஹ்மாவுக்கும் அனைத்து வேத ஶாஸ்த்ரங்களையும் தாமே உபதேஶித்தார். அர்ச்சாரூபியாக பெருமாளை ஆராதிக்கும் பகவத் ஶாஸ்த்ரத்தை அனந்தமான கோடிக்கணக்கான க்ரந்தங்களையெல்லாம் ஸ்ரீமத் விகநஸமாமுனிவருக்கு ப்ரத்யேகமாக உபதேஶித்தார். 


ஸ்ரீமத்விகநஸமஹர்ஷி பெருமாளை ஸ்ரீவைகானஸ பகவத் ஶாஸ்த்ரப்படி ஆராதிக்கும் தன் வழியில் வந்த அர்ச்சகர்களுக்கு  அவர்கள் மேற்கொள்ளும் மந்த்ரங்களோடு கூடிய ஆராதனத்தில் குறைகள் நீக்கி  ஆனந்தமாக ஸ்வீகரிக்க பெருமாளை ப்ரார்த்தித்தார்.  பெருமாளும் அவ்வாறே திவ்ய வரம் அருளினார். 


ஸ்ரீவைகாநஸ மாமுனிவர் பெருமாள் திருவாணை கொண்டு பூலோகத்தில் இப்பொழுது நடக்கும் ஸ்ரீஶ்வேதவராஹ கல்பத்தில் முதல் மந்வந்தரமான ஸ்வாயம்புவ மந்வந்தரத்தில் தலா 71 சதுர்யுகம் கொண்ட இவற்றில் முதல் சதுர்யுகத்தில் கருதயுகம் எனும் முதல் யுகத்திலேயே மூன்றாம் வருஷமான ஶுக்ல என்ற வருஷத்தில் ஶ்ராவணமாஸம் திருவோண நக்ஷத்ரம் பௌர்ணமீ திங்கட்கிழமை கூடிய நன்னாளில் ஸிம்ஹலக்னத்தில் பாரதபுண்யபூமியில் உத்தரப்ரதேஶத்தில் உள்ள நைமிஶாரண்யத்தில் தோன்றினார். வஸிஷ்டர், ப்ருகு, அத்ரி, மரீசி, காஶ்யபர், புலஸ்த்யர், புலஹர், க்ரது, அங்கிரஸ் ஆகிய 9 ஶிஷ்யாளுக்கும் பெருமாளுடைய ஸ்தாபநம் ப்ரதிஷ்டை, திருவாராதனம்,  திருமஞ்சனம், உத்ஸவம், ப்ராயஶ்சித்தாதிகளும் அவற்றுக்கு துணையாக பல முக்ய விஷயங்களும் அடங்கிய ஶாஸ்த்ரம் அடங்கியதான ஸ்ரீவைகானஸ பகவத் ஶாஸ்த்ரத்தை ஒன்றரை கோடி க்ரந்தங்களாக உலக நன்மையின் பொருட்டு உபதேஶித்தார். ப்ருகு, அத்ரி, மரீசி, காஶ்யபர் ஆகிய நால்வரும் நான்கு லக்ஷம் க்ரந்தங்களாக சுருக்கி தங்கள் ஶிஷ்யர்களுக்கு ஸ்ரீவைகானஸ பகவத் ஶாஸ்த்ரத்தை உபதேஶித்தனர். இந்த ஶாஸ்த்ரப்படி பெருமாளை ஆராதிப்பதாலேயே உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் எல்லா நலமும் வளமும் பெருகும். எல்லா உயிரினங்களும் பூமியும் அகில உலகங்களும் க்ஷேமத்தை அடையும். ஸர்வ தேவதைகளும் ரிஷிகளும் ஸர்வ தேவதா கணங்களும் ஏனைய அஷ்டாதஶ கணங்களும் த்ருப்தி அடைவர்.

   ஸ்ரீ வைகானஸ பகவத் ஶாஸ்த்ரத்தை பின்பற்றி நிறைய கோயில்கள் உள்ளன, சில புகழ் பெற்றவைகள் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில், திருமலை திருப்பதி, ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி , சென்னை, ஸ்ரீ கள்ளழகர் கோவில் , மதுரை, ஸ்ரீ ஆண்டாள் கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோவில், கும்பகோணம். மற்றும் பலப்பல கோவில்கள் பாரதம் முழுவதும் பரந்து உள்ளன.

© ஸ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ர பாடஶாலை

bottom of page